மருந்துக் கொள்முதலுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமை ………

மருந்துக் கொள்முதலுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு கவலை

இந்திய அரசாங்கம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் சுகாதார அமைச்சுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளபோதும் அவற்றை அரசதுறையினர் மருந்துக் கொள்முதலுக்கு உரிய முறையில் பயன்படுத்தப்படாமை குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக கவலை வெளியிட்டார்.

இருந்தபோதும் இந்தக் கடனுதவியின் கீழ் தனியாத் துறையினருக்கு வழங்கப்பட்ட கோட்டா உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலைத்தேய மற்றும் ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பு தொடர்பில் ஆராயும் நோக்கில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அண்மையில் (05) கூடியபோதே அதன் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளில் 50 வீதமானவையே இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுதேச மருந்து உற்பத்திக்கான மூலப்பொருள்களின் இறக்குமதிக்காக 6 மில்லியன் டொலர் செலவாகிறது. இந்த இறக்குமதியை நிறுத்தி தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருந்து வழங்கற் பிரிவுத் துறையினர், இந்திய கடன் திட்டத்தின் கீழ் வருடமொன்றுக்குத் தேவையான மருந்துகளுக்கான கோரிக்கை இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் முன்வைத்திருப்பதாகவும், இத்திட்டத்தின் தன்மை காரணமாக மருந்துகள் கிடைப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். சர்வதேச நிதி உதவிகளுக்கு மேலதிகமாக மருந்துக் கொள்முதலுக்காக டொலர்களை வழங்குவதாகத் திறைசேரியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலைத்தேய மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான விடயத்தில் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்திற்குப் பணத்தைச் செலுத்தி, தனியார் துறைக்குத் தேவையான மருந்துகளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தால், டொலர்கள் சிலவற்றை சேமிக்க முடியும் என்றும் இங்கு யோசனை முன்வைக்கப்பட்டது.

உள்ளுர் மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்திக்குத் தேவையான 130 மூலிகைப் பொருட்கள் தற்போது இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் சுமார் 50 மூலிகைகள் இலங்கையில் பயிரிடப்படுவதில்லையென்றும் ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். பயிரிடுவதற்குப் போதிய நிலப்பரப்பு இன்மை மற்றும் ஏனைய காரணிகளால் 80 மருத்துவப் பயிர்களையும் பயிரிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேதம் மற்றும் உள்ளூர் மருந்துகளுக்குப் பயன்படுத்தக்கூடிய மூலிகைப் பொருட்களுக்கான மாற்று மூலிகைகளின் பட்டியலில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 130 மூலிகைப் பொருட்களில் 40-50க்கான மாற்றீடுகள் இருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே அந்த 130 தாவரங்களில் பெரும்பாலானவற்றை இலங்கையில் பயிரிட முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

இலங்கையில் காணப்படும் மூலிகை மருந்துகளை சேகரிப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும், இதன்காரணமாக, வனப் பாதுகாப்புச் சட்டங்கள் போன்றவற்றால், மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கும் சேகரிப்பதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மூலிகைச் செடிகளை வளர்ப்பதில் வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் கலந்துரையாடல்களை நடத்தி உரிமம் வழங்கும் நடைமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார். வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில் மருந்து சேகரிப்பு திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்துமாறும் ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.

மருந்துகளின் விலைகள் மும்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், முதியோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கொரோனாவை விட அதிகமான பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக் அபேசிங்ஹ, கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ ராமேஸ்வரன்,  அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சின் மருந்து வழங்கற் பிரிவின் பிரதிநிதிகள், ஆயுர்வேத திணைக்களம், மேலைத்தேய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுதேச வைத்தியத்துறையின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.