மாண்டஸை அடுத்து வரும் புயலுக்கு பெயர் 'மொக்க'… இப்பவே முடிவு செஞ்சுட்டாங்களாம்!

வங்கக் கடலில் தற்போது உருவாகி வடதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய வரும் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிந்துரைப்படி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டி்ன் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாம்.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் புயல் சின்னம் உருவாவது வழக்கம். இவ்வாறு உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் இருந்து முடிவு செய்யப்படும் ஒரு பெயர் வைக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்ற பெயர், வங்கக் கடலில் உருவாகி தற்போது மாமல்லபுரத்துக்கு அருகே கரையை கடந்து கொண்டிருக்கும் புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டு மொழியில மாண்டஸ் என்பதற்கு ‘புதையல் பெட்டி’ என்று பொருளாம்.

மாண்டாஸ் ஆடி அடங்கிய பிறகு ,வங்கக் கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாகும் புயலுக்கு ‘மொக்க’ என்று பெயரிடப்பட உள்ளது. ஏமன் நாட்டில் பெயர் பெற்ற” துறைமுகமான மொக்கவை குறிக்கும் வகையில் இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து, அதனை மற்ற நாடுகள் ஏற்று கொண்டுள்ளதை அடுத்து, மாண்டஸை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாம்.

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்ட இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளும், ஆண்டுதோறும் தலா 13 பெயர்களை பட்டியலிட்டு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.