புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் செல்போன் செயலி 2.0 நேற்று தொடங்கப் பட்டது. இதன் மூலம் சட்ட அதிகாரிகள், மத்திய அமைச்சகங்களின் சிறப்பு அதிகாரிகள் இனி நீதிமன்ற நடைமுறைகளை நிகழ்நேரத்தில் காண முடியும்.
உச்ச நீதிமன்றத்தின் செல்போன் செயலி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று காலை வெளியிட்டார். அதன் பின் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
இந்த ஆண்ட்ராய்டு வகை செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியும். ஐஓஎஸ் பதிப்பு இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கும். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரிகள் தங்களின் வழக்கு நிலவரம், தீர்ப்புகள், உத்தரவுகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட நீதிமன்றத்தின் நடவடிக்கைகைளை நிகழ் நேரத்தில் காண முடியும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
கரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில், இதே போன்ற வசதியை சில பத்திரிக்கையாளர்கள் பெற அப்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அனுமதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.