புதுடில்லி, :சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற விளம்பரங்களால் போட்டித் தேர்வு எழுத முடியாமல் போனதாகக் கூறி இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ‘யு – டியூப்’ சமூக வலைதளத்தில் வரும் ஆபாச விளம்பரங்களால், போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதற்கு இழப்பீடாக அந்த நிறுவனத்திடம் இருந்து 75 லட்சம் ரூபாய் பெற்றுத் தரவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதை தள்ளுபடி செய்ததுடன், நேரில் ஆஜரான மனுதாரருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
சமூக வலைதளங்களில் தேவையற்ற விளம்பரங்களைப் பார்த்து, உங்கள் நேரத்தை வீணடித்துள்ளீர்கள். அதனால், உங்கள் கவனம் சிதறியது. அதேநேரத்தில் இதனால் தான் போட்டித் தேர்வு எழுத முடியவில்லை என்று சொல்வது எந்த விதத்திலும்நியாயம் இல்லை.
விளம்பரங்களைப் பார்ப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எதற்காக அவற்றை பார்க்க வேண்டும்? இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின், மனுதாரர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, அபராத தொகையை 25 ஆயிரம் ரூபாயாக குறைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement