சென்னை: “1891 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தைக் கடந்தால், இது 13-வது புயலாகும்” என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் சுமார் 135 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு – சனிக்கிழமை காலைக்கு இடைப்பட்ட நேரத்தில், மாமல்லபுரத்துக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.
தற்போது சென்னை எஸ் பேண்ட் ரேடார் (S Band Rador) அடிப்படையில் பார்க்கின்றபோது, இந்தப் புயலின் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 முதல் 80 கி.மீட்டராக இருக்கிறது.
1891 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் கடந்துள்ளன. இந்தப் புயல் மாமல்லபுரத்தைக் கடந்தால், இது 13-வது புயலாகும்” என்று அவர் கூறினார். > நிகழ் பதிவு | மாண்டஸ் புயல் – பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு