50 லட்சம் பெண்களுக்கு கல்வி: சமையல் கலைநிபுணர் முயற்சி| Dinamalar

நியூயார்க் : கேரளாவைச் சேர்ந்த பெண், தன் 96 வயதில் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறித்து அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் விகாஸ் கன்னா, 50 லட்சம் இளம் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கும் இயக்கத்தை துவக்கியுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா, குடும்ப சூழ்நிலையால் சிறு வயதில் படிக்க முடியவில்லை. தன் 96 வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். அவர் நான்காம் வகுப்பு தேர்வில், 100க்கு 98 மதிப்பெண் எடுத்து, படிப்பின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தியை, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் விகாஸ் கன்னா படித்ததும் ஆச்சரியமடைந்தார்.

கார்த்தியாயினி அம்மா குறித்து, ‘பேர்பூட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் குறும்படம் தயாரித்துள்ளார். இதற்கு, சர்வதேச அளவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘லீப் டு ஷைன்’ என்ற அரசு சாரா அமைப்பின் உதவியுடன், இந்தியாவில் உள்ள இளம் பெண்களுக்கு கல்வி வழங்கும் இயக்கத்தை விகாஸ் கன்னா துவக்கியுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுக்குள், ௫௦ லட்சம் இளம் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.

மேலும், பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது, சுயமாக தொழில் செய்யும் வகையில் சமையல் கலை பயிற்சி அளிப்பது, பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்வது போன்றவற்றில் ஈடுபட விகாஸ் கன்னா திட்டமிட்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.