வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் நேற்று முதலே மழை வெளுத்துவாங்குகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மழை மற்றும் காற்று காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்க தொடங்கியிருக்கிறது. அதேசமயம் கடலில் எழும் அலைகளை காண்பதற்கு மக்கள் கடற்கரைக்கு வர ஆரம்பித்தனர். ஆனால் அப்படி செல்வது பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
இதற்கிடையே மழை காரணமாக ஆறு மாவட்டங்களில் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாகவும், பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதாலும் மக்கள் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அதேசமயம் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டாலும் ஆம்னி பேருந்துகள் சேவை இயங்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல் இயங்கும் என ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர் சங்க தலைவர் அ.அன்பழகன் அறிவித்திருக்கிறார். முன்னதாக மாண்டஸ் புயலானது காரைக்கால் அருகே வலுவிழந்துவிட்டதாகவும், ஆனாலும் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.