வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயலானது இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. மாமல்லபுரத்தின் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் மாண்டஸ் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கே 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கிமீ வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் மழை கொட்ட ஆரம்பித்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மக்கள் யாரும் அநாவசியமாக வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. சென்னையில் இருக்கும் கடல்களும் கொந்தளிப்போடு காணப்படுகின்றன.
இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்துவருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் கடலை ரசிக்கவும், தங்களது கால்களை நனைக்கவும் அமைக்கப்பட்ட மரத்தாலான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்திருக்கிறது.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது.
380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
பாதை சேதமடைந்தது குறித்து பேசிய சென்னை மேயர் ப்ரியா, “ மாண்டஸ் புயலால் மெரினா கடற்பகுதியில் நேற்று முதல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டன. இந்நிலையில் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்” என்றார்.
மேலும் படிகக் | Cyclone Mandous Live:மாண்டஸால் வந்த சோதனை – சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன