LGBTQIA+ குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மருவிய பாலத்தினவர் மற்றும் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், மருவிய பாலித்தனவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு கருத்துகள் கோரப்பட்டதாகவும், கருத்துகள் ஏதும் வராததால் விதிகள் சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என கூறினார்.

LGBTQIA PLUS சமூகத்தினருக்கான கொள்கை இன்னும் மூன்று மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் எனவும் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை அடுத்து வழக்கு விசாரணையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.