ஆபாச விளம்பரங்களுக்கு தடை கேட்டவருக்கு ரூ.25,000 அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: யூடியூபில் வரும் ஆபாச விளம்பரங்களுக்கு தடை கேட்ட விவகாரத்தில் மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,‘‘யூடியூபில் ஆபாச விளம்பரங்கள் வருகின்றது. இதனால் எனது கவனம் சிதறி காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போய்விட்டது. எனவே எனக்கு ஏற்பட்ட நிலைமைக்கு ரூ.75 லட்சத்தை இழப்பீட்டு தொகையாக யூடியூப் நிறுவனத்திடம் இருந்து பெற்று தர வேண்டும். இத்தகைய ஆபாச விளம்பரங்களை சம்பந்தப்பட்ட தளத்திலிருந்து முழுமையாக நீக்கி தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த  மனு  நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கடுமையான கோபமடைந்த நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடாவடியான மனுக்களில் இதுவும் ஒன்றாகும். உங்களுக்கு அதுபோன்று வரும் விளம்பரங்கைள் பிடிக்கவில்லை என்றால் பார்க்காமலோ அல்லது நிராகரித்தோ விடுங்கள். அதற்காக இப்படிப்பட்ட மோசமான மனுவை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.25000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.