விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவண்ணைநல்லூர் அருகே சின்னதம்பி நடியம்மாள் என்ற தம்பதிக்கு 30 வயதில் செல்வி என்ற மகள் இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன் செல்விக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அயன் குஞ்சரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்கள் இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. கணவன், மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் செல்வி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனது தாய் தந்தையுடன் வசித்து வரும் நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகின்றது.
இத்தகைய சூழலில் செல்வியின் மாமனார் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி உயிரிழந்து இருக்கிறார். அவருடைய இறப்புக்கு துக்கம் விசாரிக்க செல்வி கணவர் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார். திடீரென அவர் இறந்து போனதாக செல்வியின் தாய் தந்தைக்கு தகவல் கிடைத்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளின் உடலை பார்த்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். அவரது கழுத்தில் சில காயங்கள் இருப்பதால் அவரை கொலை செய்திருக்கலாம் என்று பெற்றோர் சந்தேகப்பட்டனர்.
இதனை தொடர்ந்து செல்வியின் கணவர் மற்றும் மாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடந்த 5 வருடங்களாக மாமியார் மருமகள் செல்வி மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருந்ததாகவும் சம்பவ தினத்தில் மருமகளை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு வலிப்பு வந்ததாக நாடகமாடியதாகவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கணவர் மற்றும் மாமியார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.