புதுடெல்லி: 2002ம் ஆண்டு வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டதாக தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் அமித் ஷா கூறியது தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த மாதம் கேடா மாவட்டத்தில் உள்ள மகுதா நகரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது மத கலவரங்கள் அதிகமாக இருந்தன.
பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து போராடுவதற்கு தூண்டப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ் தனது வாக்குவங்கியை பலப்படுத்திக்கொண்டது. குற்றவாளிகள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்ற ஆதரவின் காரணமாக வன்முறையில் ஈடுபடுவதை வழக்கமாககொண்டுள்ளனர். ஆனால் 2002ம் ஆண்டில் தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர்கள் வன்முறையை கைவிட்டனர்” என்றார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை குறித்து அமித் ஷா பேசியதாக குற்றம்சாட்டப்பட்டன. இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள்,‘‘மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட கருத்தை பெற்ற பின்னர், அமித் ஷா கூறிய ‘வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டது’ என்ற வார்த்தை தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளன.