விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியைத் தொடர்ந்து உலக அளவில் பெயர்பெற்றது அச்சுத்தொழில் ஆகும். இத்தொழிலில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வரை வணிக வருவாய் நடைபெறும் இந்தத் தொழில், சிவகாசியின் மற்றொரு முகம் என்றால் அது மிகையாகாது.

2022-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் தொடங்கி, 10 நாள்களைக் கடந்துவிட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான உற்சாகமும் இப்போதே அனைத்து இடங்களிலும் களைகட்டத் தொடங்கிவிட்டது. அதன்படி, புதுவருடத்திற்காக காலண்டர் மற்றும் டைரி தயார் செய்யும் பணிகளும் சிவகாசியில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
சிறிதும், பெரிதுமாக பல நூற்றுக்கணக்கான அச்சக நிறுவனங்கள் சிவகாசியைச் சுற்றிலும் காலண்டர், டைரி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சிவகாசியில் தயாரிக்கப்படும் டைரி, காலண்டர்கள் ஆகியன, இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, அந்தமான் நிக்கோபார், கனடா மற்றும் அரபு நாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு, காகிதம், காலண்டர் அட்டை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலையேற்றம் 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ள காரணத்தால் 2023-ம் ஆண்டுக்கான தினசரி மற்றும் மாத காலண்டருக்கான விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு காலண்டர் விலையைக் காட்டிலும் 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை 2023-ம் ஆண்டுக்கான காலண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிவகாசியில் காலண்டர் தயாரிப்பில் ஈடுபடும் பிரபல அச்சக நிறுவனத்தை சேர்ந்த கவின் பேசுகையில், “வழக்கமாக காலண்டர் தயாரிப்பு மூலப்பொருட்கள் விலை ஓரளவு மட்டுமே உயரும். ஆனால் இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் 30 சதவிகிதத்திற்கும் மேல் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துவிட்ட காரணத்தால் அந்த விலையேற்றம் காலண்டர் விற்பனையிலும் எதிரொலித்துள்ளது.

இருப்பினும் காலண்டர் விற்பனையை அதிகரிக்க, புதுப்புது டிசைன்களில் காலண்டர்கள் அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளோம். வழக்கமாக அச்சிடப்படும் தினசரி காலண்டர்கள் தவிர இந்த முறை குழந்தைகளை கவரும் வகையில் பல வெரைட்டிகளில் காலண்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சோட்டா பீம், டோரா, டோரிமான், மோட்டு பட்லு, பாண்டா, சின்சான், மிஸ்டர் பீன், டாம் அண்ட் ஜெர்ரி, பார்பி டால் போன்ற கார்ட்டூன் சித்திரங்களை பிரதானப்படுத்தி காலண்டர்கள் தயார் செய்கிறோம்.
இவை தவிர பேனா ஸ்டாண்ட், டைமண்ட் வடிவில் தினசரி மற்றும் மாத காலண்டரை ஒருசேர பயன்படுத்தும் வகையிலும் காலண்டர்களை அறிமுகப்படுத்துகிறோம். பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு கற்றல் திறனை ஊக்கப்படுத்தவும், காலண்டர் பயன்படுத்தும் பழக்கத்தை வழக்கப்படுத்தவும் தினசரி நாட்காட்டியில் பழங்கள், விலங்குகள், காய்கறிகளின் படத்துடன் அவற்றுக்கான பெயர்களை அச்சிட்டு கற்பதற்கு ஏதுவாக தயார் செய்துள்ளோம்.

இதன்மூலம், குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் அன்றாட பழக்கத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். இதுமாதிரியான கண்கவர் டிசைன்கள் மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கும் விதத்தில் தயார் செய்யப்படும் காலண்டர்கள் மூலம் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.