கோவை திமுகவை பலப்படுத்தும் அஸைன்மென்ட் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்பற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு கோவையில் பிரமாண்ட வெற்றியை பெற்று கொடுத்தார். தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்தோரை திமுகவுக்குள் இழுக்கும் பணியை செய்து வருகிறார்.

அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி நாகராஜன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏகளை இழுக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது என சொல்லப்பட்டது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி மற்றும் அவரின் கணவர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்துள்ளார். இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்திருப்பதும் செந்தில் பாலாஜி தான்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர். ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
முன்னாள் கவுன்சிலராக இருந்த செந்தில் கார்த்திகேயன், ரியல் எஸ்டேட் தொழிலில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறார். இதனால்தான் வேலுமணியின் நிழலான சந்திரசேகர் மனைவியையும் மேயர் ரேஸில் ஓவர் டேக் செய்து தன் மனைவி கிருபாலினியை அந்த இடத்துக்கு கொண்டு வந்தார்.

ஆனால் தேர்தலில் கிருபாலினி தோல்வியடைந்தார். அதன் பிறகும் கூட கட்சி நடவடிக்கைகளில் ஆக்டிவாகத்தான் இருந்தார். சமீபத்தில் நடந்த அவர் குடும்ப நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி முன்னிலையில் செந்தில் கார்த்திகேயன் இன்று முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். தொழில் நெருக்கடி காரணமாக அவர் திமுகவில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில் கார்த்திகேயன் கூறுகையில், “குடும்பத்துடன் திமுகவில் இணைந்திருக்கிறேன்.

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு எப்படியாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பினேன். அவர்களின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அம்மாவின் நினைவு நாள் டிசம்பர் 4ம் தேதியா, டிசம்பர் 5ம் தேதியா என்ற குழப்பம் நிலவியது.
களத்தில் உள்ள மக்களுடன் பழகுகிறோம். அவர்களின் எண்ண ஓட்டத்தை நன்கறிவேன். அவர்களை விமர்சிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கும் மாற்றம் தேவைப்பட்டது. செந்தில் பாலாஜி அண்ணனை எனக்கு முன்பே தெரியும். அவரும் ஒன்றாக பயணிக்கலாம் என அழைப்பு விடுத்தார்.

மற்றபடி தொழில் காரணமாக எல்லாம் நான் மாறவில்லை. எனக்கு நிலையான தலைமை தேவைப்பட்டது. அதற்கு திமுக சரியாக இருக்கும் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அவ்வளவுதான்.” என்றார். அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் திமுக செல்வதால் வேலுமணி அதிர்ச்சியடைந்துள்ளார்.