சென்னை அருகே கரையை கடந்த மாண்டஸ் எத்தனையாவது புயல் தெரியுமா?… ஒரு மினி வரலாறு

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. தீவிர புயலாக அச்சுறுத்திவந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 80 கிலோமீட்டர்வரை காற்று பலமாக வீசியது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட புயல்கள் கரையை கடந்திருக்கின்றன. இந்தச் சூழலில் சென்னை – புதுச்சேரி இடையே 1901 முதல் 2021வரை 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. 

1994ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி உருவாகி 31ஆம் தேதி புயல் ஒன்று சென்னையில் அதிதீவிர புயலாக கரையை கடந்தது. அந்தப் புயல் கரையை கடக்கும்போது 132 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதில் 69 பேர் உயிரிழந்தார்கள். 50 கோடி ரூபாய்க்கும் மேல் பொருள்கள் சேதமடைந்தன. 

இதேபோல், 2012ஆம் ஆண்டு நீலம் புயல் நேரடியாக சென்னையை கடந்தது. 94ஆம் ஆண்டு புயலைப் போலவே அக்டோபர் 31ஆம் தேதி நேரடியாக புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்தை தொட்டது. இதன் காரணமாக சென்னையில் 85 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். 

வர்தா புயல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி சென்னைக்கு அருகே கரையை கடந்தது. இந்தப் புயலால் சென்னை மிகமோசமான பாதிப்புக்கு உள்ளாகியது. இந்தப் புயல் கரையை கடக்கும்போது 192 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் சென்னை வரலாற்றில் வர்தா புயலே மிக மோசமான புயல் என கருதப்படுகிறது.

இப்படி, 1901 முதல் 2021 வரையிலான (121 ஆண்டுகள்) காலக்கட்டத்தில் சென்னை – புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. அதாவது கடந்த 121 ஆண்டுகளில் இதுவரை 12 புயல்கள் மாமல்லபுரம் ஒட்டிய கடலோர பகுதிகளில் கரையை கடந்துள்ளது. தற்போது மாண்டஸ் புயலும் இப்பகுதியில் கரையை கடந்திருப்பதால் சென்னை – புதுவை இடையை கரையை கடந்த 13ஆவது புயல் மாண்டஸ் ஆகும். 

இதற்கிடையே, அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று அச்சுறுத்துலுடன் சென்னையை நோக்கி கடந்த 2010ஆம் ஆண்டு முன்னேறிய ஜல் புயல், சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடந்தது. ஆனால், மிகவும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைத் தொட்டது. இதனால் கனமழை மட்டும் பெய்தது. சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.