சென்னை: “சென்னையில் உள்ள காசிமேட்டில் 900 படகுகள் உள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 படகுகளுக்கு மேல் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. ஒரு படகின் விலை ரூ.40 லட்சம் முதல் 50 லட்சம். எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.20 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்தால் நல்லது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை கொடுத்தால் ஒரு முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடம் ஒரு கூட்டத்தைக்கூட்டி, கடல் அரிப்பைத் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திருக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 5-ம் தேதியே வானிலை ஆய்வு மையம் புயல் குறித்து எச்சரித்த பிறகு, அதிகாரிகளுடன் ஒரு கூட்டமும் நடத்தாமல், முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு குளு குளு சுற்றுலா செல்கிறார். அங்கு சென்றுவிட்டு இன்று வந்து புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
சென்னை காசிமேட்டில் 900 படகுகள் உள்ள நிலையில், கிட்டத்தட்ட 200 படகுகளுக்கு மேல் பகுதியாக சேதமடைந்துள்ளன. முழுவதுமாக சில படகுகள் சேதமடைந்துள்ளன. ஒரு படகின் விலை ரூ.40 லட்சம் முதல் 50 லட்சம். எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கொடுத்தால் நல்லது” என்று கூறினார்.
முன்னதாக, சென்னை, காசிமேட்டில் உள்ள மீனவ பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கேட்போம். மீனவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகை கேட்டிருக்கிறார்கள். கணக்கெடுப்பு முழுமையாக எடுத்த பிறகு நிவாரணம் வழங்கப்படும். பைபர் படகுகள் கணக்கெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. எல்லா படகுகளும் கணக்கு எடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.