68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளில், காங்கிரஸ் பெரும்பான்மையைத் தாண்டி 40 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது.
இதை அடுத்து, முதலமைச்சர் பதவியை ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய, தலைநகர் சிம்லாவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகால், முன்னாள் முதலமைச்சர் பூபேந்திர ஹூடா, ஹிமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜிவ் சுக்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தநிலையில் ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இரண்டாம் முறையாக இன்று நடைபெற்ற நிலையில், சுக்விந்தர் சிங் தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் பிரதிபா சிங்கை முதல்வராக அறிவிக்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு செயல்படுவார் என்றும், துணை முதல்வராக முகேஷ் அக்ன்ஹோத்ரி செயல்படுவார் என்றும் நாளை காலை 11 மணி அளவில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் முதலைமைச்சர் தேர்வுக்கான ஆலோசனை குழு உறுப்பினரும், சத்திஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
‘‘17 வயதில் இருந்து அரசியலில் செயல்பட்டு வருகிறேன். காங்கிரஸ் எனக்கு செய்ததை என்றும் மறக்க மாட்டேன். மக்களிடம் கூறிய உறுதிமொழிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். ஹிமாச்சல் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்படுவேன். ஹிமாச்சலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நமது அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கும். நிச்சயமாக மாற்றம் ஏற்படும். என்னை தேர்வு செய்ததற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
58 வயதாகும் சுக்விந்தர் சிங், 4 முறையாக எம்எல்ஏவாக இருந்தவர். சட்டப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே, காங்கிரஸின் தேசிய மாணவர் அமைப்பில் இணைந்தார். அப்போது அவருக்கு 17 வயது. ஹிமாச்சல் காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த விர்பாத்ரா சிங்குக்கும் இவருக்கும் அதிகமாக ஒத்து போகாது. பல்கலைகழகத்தில் படித்த போதே, தேசிய பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் இறங்கியவர் தான் சுக்விந்தர் சிங்.
6 முறை முதல்வராக இருந்தவரும், மக்களிடையே செல்வாக்கு மிக்கவருமான விர்பாத்ரா சிங் மறைவை அடுத்து நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அவரின் மனைவியான பிரதிபா சிங்கும் முதல்வருக்கான போட்டியில் இருந்த நிலையில் சுக்விந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, ராகுல் காந்தியுடனான நெருங்கிய நட்பு மற்றும் சாதாரண குடும்ப பிண்ணனி தான் காரணம் என கூறப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு.!
இத்தகைய உயர் பதவிக்கு வர, ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தீவிர முயற்சிகளை சுக்விந்தர் மேற்கொண்டுள்ளார். சாதாரண மாநகராட்சியின் சாலை போக்குவரத்து ஓட்டுநருக்கு பிறந்த சுக்விந்தர் சிங், ஆரம்பத்தில் பால் விற்பனையாளராக இருந்துள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்து மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்ததால், ஹிமாச்சலில் வெற்றி பெற்றுள்ள 40 எம்எல்ஏக்களில் 25 பேருக்கும் மேலான பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.