ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் – ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பனில் கடலின் நடுவே 1914-ம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழைய ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வந்தன. அதனால் ரயில்கள் மிக மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்தது. தற்போது புதிய ரயில் பாலம் 2.05 கி.மீ தூரத்திற்கு பாம்பன் கடலில் ரூபாய் 535 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானத்தை ரயில்வே துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. இதுவரை 84 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய பாலத்திற்காகக் கடலில் பல்வேறு சீதோசன நிலை சிரமங்களுக்கிடையே 101 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் 99 இணைப்பு கிர்டர்கள் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கப்பல்கள் எளிதாகப் பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மின்தூக்கி கிர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ராமேஸ்வரம் வருகைதந்தார். ரூ.90 கோடி மதிப்பில் நடைபெறப் போகும் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அதற்கான வரைபடங்களைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். பின்பு ராமேஸ்வரம் தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளன. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்ததாரர் வரைபடங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ராமேஸ்வரம் போன்ற பெரிய சுற்றுலாத் தலத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்பாட்டுக்கு தனித்தனி முனையங்கள் அமைய இருக்கின்றன. விசாலமான வாகன நிறுத்தும் இடங்கள், இரண்டு மாடி ரயில் நிலைய கட்டடத்தில் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் ஆகியவை அமைய இருக்கின்றன.

புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகள் 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதைக்கான நில ஆர்ஜித பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் வரையிலான மின் மயமாக்கல் பணிகள் உச்சிப்புளி இந்தியக் கடற்படை விமான தள விரிவாக்கத்திற்கான ரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு தொடங்கும்” எனக் கூறினார்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது மீனவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.