தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் அதிபட்லா பகுதியில் வசிப்பவர் வைஷாலி (24). இவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சுமார் 50 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆயுதத்துடன் வைஷாலி வீட்டில் புகுந்து, வீட்டில் உள்ள பொருள்களை சேதப் படுத்தியதுடன், அவரை வலுகட்டாயமாக காரில் கடத்திச் சென்றிருக்கிறது. மேலும், அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் கடுமையாக தாக்கியிருக்கிறது.
நவீன் ரெட்டி என்பவரும், வைஷாலியும் கடந்த சில நாள்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை வைஷாலியை நிச்சயதார்த்தம் செய்து கொள்ள வேறொரு குடும்பத்தினர் வருவதை அறிந்து கொண்ட நவீன், வைஷாலியின் வீட்டை தாக்கி அவரை கடத்த முயற்சி செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக வைஷாலி-யின் தந்தை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததும், சம்பவ இடத்துக்கு காவல்துறை விரைந்தது. ஆனால், அதற்குள் குற்றவாளிகள் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தார், “எங்கள் மகளின் சம்மதம் இல்லாமல், அவளை வெளியே இழுத்து, காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள். இது அநியாயம், இது பாவம். எங்கள் வீட்டுப் பெண்ணை என்ன செய்யப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. காவல்துறை விரைவாக எங்கள் வீட்டுப் பெண்ணை மீட்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டை சேதப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்டவரின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களையும் தாக்கியிருக்கின்றனர். கண்டிப்பாக இது கடுமையான குற்றம். பெற்றோரிடம் பேசி தேவையான தகவல்களை பெற்றிருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.
வைசாலியை கடத்திச் சென்றது கடை உரிமையாளர் நவீன் ரெட்டி என போலீஸார் அடையாளம் கண்டுபிடித்ததையடுத்து, குற்றவாளியை கைது செய்த போலீஸார் 6 மணி நேரத்துக்குள் அந்த பெண்ணை மீட்டனர்.
வீடியோ… எச்சரிக்கை: பெண் மருத்துவர் வீட்டில் நடந்த கொடூர தாக்குதல் காட்சி..!
#hyderabad pic.twitter.com/Uw6XYBNTwV
— Sai vineeth(Journalist) (@SmRtysai) December 9, 2022