பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளும் உடைந்தன; நெல், மஞ்சள், கரும்பு, வாழைகள் சேதம்

ஈரோடு: பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் அடுத்தடுத்து இரு கரைகளும் உடைந்ததால் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த ஆண்டு பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட்  12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  டிசம்பர் 9ம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பெருந்துறை நசியனூர் பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணி ஒரு மாதம் நடைபெற்று வந்தது. இதனால் நெல் நடவு தாமதம் ஏற்பட்டது.

கடந்த மாதம் சத்தியமங்கலம் அருகே 2வது முறையாக மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலின் 59.6வது மைல் தூரத்தில் பெருந்துறை அடுத்துள்ள வாய்க்கால் மேடு என்ற இடத்தில் நேற்று மாலை வாய்க்காலின் வலதுகரையில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.  கசிவு நீர் ஓடை வழியாக இடது கரையில் உள்ள பாசன நிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  மண் அரிப்பு ஏற்பட்டு இடது கரையும் அடுத்தடுத்து உடைந்தது. வாய்க்காலின் 2 கரைகளும் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விளைநிலங்களில் பாய்ந்தது.

அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை 6 மணிக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு: கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதியில் அடுத்த மாதம் நெல் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போது வாய்க்கால் உடைப்பினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், இதேபோல மஞ்சள் பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.