மாண்டஸ் புயல் எதிரொலி: பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை – தேர்வுகள் ரத்து!

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் மற்றும்
கனமழை
காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்பரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் கனமழை, புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வன சார்நிலைப் பணிகள் அடங்கிய வனத் தொழில் பழகுநர் தேர்வும் கனமழை, புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சேவை மீண்டும் துவங்கப்பட்டது. புயல் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

அதேபோல் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் இன்று காலை முதல் எந்தவித தாமதமும் மாற்றமும் இல்லாமல் இயல்பான நேர கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.