மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 70 முதல் 80 கிமீவரை காற்று பலமாக வீசியது. மேலும் மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. புயல் பாதிப்புக்குள்ளான இடங்களில் இருந்து மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்ததை அடுத்து சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு மற்றும் சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். புயல் பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு தப்பித்துள்ளது. நிவாரண பணிகளை அமைச்சர்கள் கவனிக்கின்றனர். பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை. 5000 பணியாளர்கள் நேற்று இரவில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது 25,000 பணியாளர்கள் சீரமைப்பு ஈடுபட்டுள்ளனர்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, பெருங்குடி மண்டலம், வார்டு-181க்குட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார். (1/2) pic.twitter.com/QcDTGVM7vI
— TN DIPR (@TNDIPRNEWS) December 10, 2022
மழை அதிகம் பெய்தாலும் சேதங்கள் குறைவாகவே இருக்கின்றன. திட்டமிட்டு செயல்பட்டதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். புயல், மழை பாதிப்புகளை சரி செய்ய பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நன்றி. மாண்டஸ் புயலால் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 98 கால்நடைகள் இறந்துள்ளன.
சென்னையை பொறுத்தவரை 400 மரங்கள் விழுந்திருக்கின்றன. 150 மரங்கள் தெருவிளக்குகள் மீது சாய்ந்துள்ளன. போக்குவரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களுக்கு மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாண்டஸ் புயல் பாதிப்பை சீர் செய்ய தேவைப்பட்டால் மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கப்படும்” என்றார்.