மோடி அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்பு; அண்ணாமலை செம தகவல்!

தமிழ்நாடு பாஜ சிந்தனையாளர் பிரிவு சார்பில் ‘தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி ‘தமிழகத்துக்கான எனது சிந்தனைகள் மற்றும் எதிர்காலத்தில் பாஜகவால் தமிழ் நாட்டுக்கு என்ன வழங்க முடியும்’ என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

பொதுவாகவே ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான், அரசியல் கட்சிகள் நடத்தப்படுகின்றன. தேசியக் கட்சி என்பதற்காக தமிழ்நாட்டிலும் பா.ஜ.கவின் கிளை ஒன்று இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக ஆரம்பிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். தமிழ்நாட்டில் எதற்காக பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை அடுக்குகின்றனர்.

இந்த கேள்விகளுக்கான பதிலை மக்களுக்கு சரியாக புரிய வைத்தால் தமிழகத்தில் நிச்சயம் பாஜக ஆட்சிக்கு வந்து விடும். பாஜகவை போல் கடுமையாக உழைக்கும் கட்சி தமிழகத்தில் எதுமே இல்லை.

எப்போதும் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக பாஜக.வினர் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். மக்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் கட்சிதான் எப்போதும் வெற்றி பெறுகிறது. அந்த உணர்ச்சியை சரி செய்யாத வரையில் கடுமையாக உழைத்தாலும், எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு டிசம்பர் 11ம் தேதி அவரது பெயரில் தேசிய தாய்மொழி தினம் என்ற பெயரில் அனைத்து தாய் மொழிகளுக்கான தினத்தை மோடி தலைமையிலான அரசு அறிவிக்க உள்ளது.

திராவிட கட்சிகளாலும், ஆட்சிகளாலும் தமிழ்நாட்டில் சாதிகள் ஒழிந்து விட வில்லை. நீண்ட காலமாக இருக்கும் காவிரி நதிநீர், மொழி பிரச்சினையை வைத்து தமிழகத்தில் அரசியல் நடக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்கக் கூடிய வல்லமை பாஜகவிடம் உள்ளது. அதேப் போல் பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழிக்கு பாதுகாவலனாக இருந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை பார்த்தால் தான் திராவிட கட்சிகளின் ஏமாற்று வேலை தெரிய வரும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

முன்னதாக இந்த கருத்தரங்கில் பாஜக இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘வரலாற்று ரீதியாக கங்கை நதி- பொன்னி கலாசாரம்’ என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது ‘பழங்காலம் முதல் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. தமிழ்நாடு கலாசாரம் வட இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழுக்கும், இந்திக்குமான தொடர்பு பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. எனவே தமிழுக்கும், இந்திக்குமான தொடர்பை யாராலும் பிரிக்க முடியாது’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.