விவாகரத்துக்கு ஓராண்டு காத்திருப்பதா? சட்டவிரோதம் என கேரள ஐகோர்ட் உத்தரவு!| Dinamalar

கொச்சி,’பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற, தம்பதியர் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. விவாகரத்து விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக, ஒரே மாதிரியான சட்டம் இயற்ற வேண்டும்’ என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ தம்பதி, திருமண பந்தத்தை முறித்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்தனர்.

ஆனால், விவாகரத்து கோரி வழக்கு தொடர்பவர்கள், ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டும் என, 1869ம் ஆண்டைய விவாகரத்து சட்டப் பிரிவு 10 ஏல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகள் தங்களின் விவாகரத்துக்கு தடையாக இருப்பதாகவும், இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், அந்த தம்பதி தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஏ.முகமது முஸ்தாக், ஷோபா அன்னம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற விரும்புவோர், அதற்கு விண்ணபித்து ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் காத்திருந்தால் மட்டுமே விவாகரத்து பெற முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; இது, அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது.

விவாகரத்து தொடர்பான சட்ட விதிமுறைகள் மதத்தின் அடிப்படையில் இல்லாமல், குடிமக்களின் நலன் சார்ந்து பொதுவாக இருக்க வேண்டும். இந்தியா மதச் சார்பற்ற நாடு.

எனவே, விவாகரத்து சட்டவிதிகள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து விவகாரத்து கோரும் இந்த தம்பதியின் வழக்கை குடும்ப நல நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.