அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எலக்ட்ரிசியனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ் (42). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனியார் சிமெண்ட் ஆலையில் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்த அருண்ராஜ், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவியரின் பெற்றோர் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண்ராஜை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அருண்ராஜுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மாணவிக்கு ரூபாய் 2 லட்சம் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.