Cyclone Mandous Live: பலத்த காற்று, வெளுத்த மழை – மாமல்லபுரத்தில் கரையை கடந்தது மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்தத் தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று முன் தினம் புயலாக வலுவடைந்தது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் இது. புயலாக வலுவடைந்த மாண்டஸ் அதற்கடுத்து தீவிர புயலாக மாறி வங்கக்கடலிலேயே நிலை கொண்டிருந்தது.

இதன் காரணமாக வட தமிழ்நாடு கடலோர மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆங்காங்கே பலத்த காற்றும் வீசின. சென்னையைப் பொறுத்தவரை மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. புயல் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று 26 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டன.

இதற்கிடையே தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து அதன் மையப்பகுதியானது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலானது கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றானது 70 முதல் 80 கிலோமீட்டர்வரை பலமாக வீசியது. இதன் காரணமாக சென்னையில் பல மின் கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மரங்களும் சாய்ந்துள்ளன. இதனை சரி செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.

புயல் கரையை கடந்தாலும் புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை தொடரும் என தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தப் புயலானது இன்றூ காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் அவர் கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.