புதுடெல்லி: போர் சூழல் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்களது கல்வியை தொடரவும், உக்ரைனில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரங்கள் பின்வருமாறு: போர்ச் சூழல் காரணமாக உக்ரைனில் பயிலும் மாணவர்களை மீண்டும் உக்ரைன் திரும்ப வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்த போதிலும் மாணவர்கள் தங்களது கல்வியை தொடர மீண்டும் உக்ரைன் திரும்புவதை அரசு அறிந்துள்ளதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? அவ்வாறு நாடு திரும்பிய மாணவர்கள் தங்களது கல்வியை தொடர இங்கு போதுமான உதவிகள் கிடைக்காததால், அவர்கள் தங்களது பாதுகாப்பை பணயம் வைத்து மீண்டும் உக்ரைன் செல்வது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் அறிக்கைகள் தயாரித்துள்ளதா? உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இது போன்ற கடுமையான போர்ச் சூழல் தொடர்ந்தால் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவரகள் நாடு திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? இதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி.
மீனாட்சி லேகி அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு: உக்ரைனின் கீவ் மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகம் கடந்த 25 அக்டோபர், 2022 அன்று அனைத்து இந்திய குடிமக்களையும் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி அறிக்கையும் வெளியிட்டது. மேலும் போர் தொடங்கியபோது பெரும்பாலான இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். இருப்பினும் தற்போது சுமார் 1100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் பயின்று வருகின்றனர். கடந்த 28.07.2022ம் தேதியன்று தேசிய மருத்துவ ஆணையம் ஒரு புதிய திட்டத்தை வகுத்து, அதற்கான பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 30 ஜூன் 2022ம் தேதிக்கு முன்னர் வெளிநாடுகளில் இளங்கலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் அந்தந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் அந்தந்த கல்லூரிகளின் மூலமே படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றனர்.
அவ்வாறு பட்டம் பெற்றவர்களை வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ பட்டதாரிகளுக்கான தேசிய அளவிலான தகுதி தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் வெளிநாடுகளில் தங்களால் பெற முடியாத நடைமுறை பயிற்சிகளை, இரண்டு ஆண்டு கட்டாய இண்டர்ன்ஷிப் மூலம் பெற வேண்டும். அதன் பிறகு இந்திய நிலைமைகளின்படி பயிற்சி வழங்கப்படும். உக்ரைன் அனுமதித்துள்ள தற்காலிக “இடம்பெயர் கல்வித் திட்டத்தின்” மூலம் உலகெங்கிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்யலாம். அதற்கான பட்டத்தை அந்த மாணவர்கள், உக்ரைனில் தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். செப்டம்பர் 2022ல் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் கீவ் மாகாணத்தில் உள்ள நமது இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அங்குள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய குடிமக்கள் நாடு திரும்ப விரும்பினால், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவர்கள் எல்லையை கடக்க தேவையான தகவல்களை வழங்கி உதவுவதோடு அவர்களோடு தொடர்பில் இருந்தும் உதவி வருகின்றனர்.