நாக்பூர்: குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்போர் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாக்பூர் வந்தார். அங்கு ரூ.75,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கிவைத்தார். மும்பை – நாக்பூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில், பணிகள் முடிவடைந்த நாக்பூர் – ஷீரடி வரையிலான 520 தொலைவிலான சாலை, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, பணிகள் முடிவடைந்த நாக்பூர் மெட்ரோ ரயில் பகுதி 1 சேவையை துவக்கி வைத்து, டிக்கெட் எடுத்து சுதந்திர பூங்கா முதல் காப்ரி வரை பயணம் செய்தார்உடன் பயணித்த மாணவர்களுடன் உரையாடினார். 2ம் கட்ட ரயில் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்திய நாட்டுக்கு நிலையான நீடித்த வளர்ச்சி தான் தேவை. குறுக்கு வழி அரசியல் அல்ல. சில அரசியல் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றன. குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகையவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
ஆனால், ஒன்றிய அரசு கடந்த 8 ஆண்டுகளாக மக்களின் நலன் கருதி அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஒன்றுபட்ட பலத்துடன் எல்லா மாநிலங்களையும் மேம்படுத்தினால், இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை எட்டலாம். எல்லோரது கூட்டு முயற்சி மற்றும் பரஸ்பரம் நம்பிக்கை என்ற அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளில் மக்களின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறோம். நாக்பூரில் ரூ.75,000 கோடியில் பல மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில்தான் நாக்பூரில் இவை தொடங்கப்பட்டுள்ளன.
எனவே, குறுக்கு வழி அரசியல் நடத்தும் இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இத்தகைய குறுக்குவழி அரசியலால் நாட்டை மேம்படுத்த முடியாது. எனவே, நிலையான மேம்பாட்டு கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குஜராத்தில் கிடைத்த வெற்றி, நீடித்த வளர்ச்சி மற்றும் நிலையான மேம்பாட்டுக்கான பொருளாதார கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
* கோவா மாநிலத்தின் 2வது சர்வதேச விமான நிலையமான மோபா விமான நிலையம் 2,312 ஏக்கரில் ரூ.2,870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் அடுத்தாண்டு ஜன. 5ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதேபோல், கோவாவை தளமாகக் கொண்ட அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத்தில் உள்ள தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியை தளமாகக் கொண்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓமியோபதி ஆகியவற்றை பிரதமர் கோவாவில் தொடங்கி வைத்தார்.
பின்னர், 9வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் மற்றும் ஆரோக்யா எக்ஸ்போவின் நிறைவு விழா மாநாட்டில் மோடி பேசியதாவது: உலகம் பல சிகிச்சை முறைகளை முயற்சித்துள்ளது, இப்போது அது ஆயுர்வேதத்தின் பண்டைய முறைக்குத் திரும்புகிறது. ஆயுர்வேதம் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றியும் பேசுகிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேதத்தை பாரம்பரிய மருத்துவமாக ஏற்றுக்கொண்டுள்ளது மகிழ்ச்சி. மேலும் பல நாடுகளில் பரப்பி ஆயுர்வேதத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20,000 கோடியாக இருந்த ஆயுஷ் தொழில்துறை ரூ.1.50 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.