புதுடெல்லி: சில்லறையில் சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் ஒன்றிய அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புற்றுநோய்க்கு சிகரெட் பிடித்தல் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பழக்கத்தை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சில்லறையில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒற்றை சிகரெட்டாக கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் அவற்றை வாங்கி புகைக்கின்றனர். எனவே பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் என நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து புதிய விதிமுறையை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், நாடு முழுவதும் விமான நிலையங்களில் புகை பிடிக்கும் பகுதியை நீக்கவும் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமின்றி, வரும் ஒன்றிய பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.