பெங்களூரில் ‘Bee Hotels’ – தேனீக்களை காக்க புது முயற்சி; இயற்கை மீது பேரன்பு!

மது காதருகே ‘குய்ய்ய்…’ என, தனது குட்டி இறக்கைகளால் ‘ஹை ஸ்பீடில்’ பறந்து செல்லும், தேனி, குளவி, வண்டுகளை நாம் இன்றும் கிராமங்களில் காண்கிறோம், அந்த சப்தத்தை கேட்கிறோம். என்றாலும், வானுயர்ந்த கட்டடங்கள், திரும்பிய திசையெல்லாம் ‘டிராபிக் ஜாம்’ என, பெங்களூரு, சென்னை போன்ற வளர்ந்த நகரப்பகுதிகளில், ஹாரன் சப்தத்தை தவிர, தேனீக்கள் போன்ற சிற்றுயிர்களின் சப்தத்தையும், அவற்றை கண்ணில் பார்ப்பதும் அரிதான ஒன்றாகி வருகிறது.

அயல் மகரந்த சேர்க்கை.

நகரமயமாக்கல், நகரப்பகுதியில் காணாமல் போன விளைநிலங்கள், விவசாயத்தில் அதீத நச்சுத்தன்மையுள்ள ரசாயன பூச்சிக்கொல்லிகள் என, தேனீக்களுக்குத்தான் எத்தனை எதிரிகள் இன்று. மனித குலம் வேண்டுமானால், இந்த சின்னஞ்சிறு உயிர்களுக்கு எதிரியாகலாம்; ஆனால், தேனீக்கள், குளவிகள், வண்டுக்கள் என்றுமே அனைத்து உயிர்களுக்குமான நண்பன் என்பதே உண்மை.

அனைத்து உயிர்களுக்குமான அபாயச்சங்கு!

அனைத்து பயிர்களிலும் அயல் மகரந்த சேர்க்கை நடப்பதற்கு, 80 சதவீதம்  காரணம் இவை தான். தேனீகள், வண்டுகள், அந்துப்பூச்சி, பட்டாம்பூச்சி, பம்பல் தேனீக்கள், குளவி உள்ளிட்ட பூச்சியினங்களால் தான், பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை நடக்கிறது. பல வித காரணங்களால் இவ்வகை பூச்சிக்கள் பாதிப்புக்குள்ளாகி அருகி வருவது, அனைத்து உயிர்களுக்குமான அபாயச்சங்கு என்றே கூறலாம்.

தேனீ இன வகை பூச்சிக்கள்.

சிற்றுயிர் ஆராய்ச்சியாளர்கள் கடந்த, 20 ஆண்டுகளாக, இந்தியா முழுவதிலும் நடத்திய ஆய்வில், அயல் மகரந்த சேர்க்கைக்கு அடிப்படையான, தேனீக்கள் மற்றும் தேனீக்களின் இனத்தை சேர்ந்த பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை கண்டறிந்துள்ளனர்.

ஃபீ ஹோட்டல்.

இந்த பூச்சிகள் இல்லாமல் போனால், உலகிலுள்ள பயிர், காய்கறி என சகல வித விளைபொருட்கள் சாகுபடியும் பாதித்து, மூன்றாண்டுகளில் உலகம் மொட்டைக்காடாக மாறி மனிதன் உள்பட பல உயிர்கள் உண்ண உணவின்றி உயிர்கள் அழியுமென ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இது குறித்தான தொடர் ஆய்வுகளும், இவற்றை காப்பதற்கான முயற்சியும் உலகம் முழுதும் சூழல் ஆர்வலர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

வீட்டில் ஃபீ ஹோட்டல்.

பெங்களூரில் ‘Bee Hotel’!

இந்த நிலையில், நகரப்பகுதியில் இவ்வகை பூச்சிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றை கவர்ந்து நகர்ப்புற விவசாயத்தை மேம்படுத்தவும், பெங்களூரில் இயங்கி வரும் ATREE – (அசோகா டிரஸ்ட் பார் ரிசர்ச் இன் இகாலஜி அண்டு த என்விரோன்மென்ட்) என்ற சூழல் பாதுகாப்பு அமைப்பினர் புது முயற்சியாக, ‘ஃபீ ஹோட்டல்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஹோட்டல், மோட்டல் என பலவற்றை கேள்விப்பட்டுள்ளோம். அதென்ன, Bee Hotel? என்ற கேள்வியுடன், இத்திட்டத்தை உருவாக்கிய ATREE அமைப்பை சேர்ந்த வரும், சூழல் பாதுகாப்பு தளத்தில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் முனைவர் சுபத்ரா தேவியை தொடர்பு கொண்டு பேசினோம், ‘‘தேனீக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாமல், தேனீக்கள் சார்ந்த பூச்சி இனங்களின் முக்கியத்தை உணர்த்த இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் வீட்டு காய்கறித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்து உள்ளவர்களிடம், இந்த பூச்சிகளின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மூங்கில், பூச்செடிகளின் மரக்குச்சிகள் மற்றும் இதர மரக்கட்டைகளைக்கொண்டு, ஃபீ ஹோட்டல் அமைத்துள்ளோம். இவற்றில் சிறு சிறு துளையிட்டுள்ளதால், தேனீக்கள் போன்ற பூச்சிகள் உள்ளே வந்து தங்கிச்செல்கின்றன. மேலும், இனப்பெருக்கம் செய்து அங்கேயே தங்கி விடுகின்றன.

Bee Hotel Mobile App.

பிரத்தியேக மொபைல் ஆப்!

ஒரு ஃபீ ஹோட்டலை, 1,500 ரூபாய் மதிப்பீட்டில் தயாரித்து, 50க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கொடுத்துள்ளளோம். இதை, வீட்டுக் காய்கறித்தோட்டம், மாடித்தோட்டம் உள்ள பகுதிகளில் மனிதர்களுக்கு பாதிப்பில்லாத இடங்களில் அமைத்துக்கொடுத்து உள்ளோம்.

நகரப்பகுதியில் தேனீக்கள் மற்றும் அதன் இனத்திலுள்ள பூச்சிக்களின் நடமாட்டத்தை கண்டறியவும், ஃபீ ஹோட்டல்களில் எந்தெந்த வகையான பூச்சியினங்கள் வருகின்றன என கண்காணிக் பிரத்தியேகமான, Bee Hotel என்ற பெயரில் மொபைல் ஆப் வெளியிட்டுள்ளோம். இதில், ஒவ்வொரு பூச்சியின் வகை, புகைப்படங்கள், எவ்வாறு கண்டறிவது, அவற்றின் செயல்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து ஆப்–பில் பதிவேற்றியுள்ளோம். இதைப்படுத்தி மக்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அனுப்பி வருகின்றனர்.

இத்திட்டத்தை மேம்படுத்த இன்னமும் ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். விரைவில், பெங்களூர் நகர் முழுதும் விரிவுபடுத்தி, மற்ற நகரங்களிலும் அறிமுகம் செய்து தேனீக்களை சார்ந்த பூச்சி இனங்களை காக்க உள்ளோம்.

வீட்டுத்தோட்டத்தில் ஃபீ ஹோட்டல்.

ரசாயன பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயம் வாயிலாக விவசாயிகள் தீர்வு கண்டால், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சியினங்கள் அழிவது குறையும் உயிர்ச்சூழல் பாதிப்படைவது தவிர்க்கப்படும்,’’ என்றார், மகிழ்ச்சியுடன். தேனீக்களுக்கு கூட ஹோட்டல் அமைத்து, அவற்றை பாதுகாக்க ஆய்வு செய்யும் இவர்களின், இயற்கையின் மீதான தீராக்காதல் (பேரன்பு) பாராட்டிற்குறியது.

விவசாயத்தில் அதீத ரசாயனம், சிற்றுயிர்களுக்கு மட்டுமல்ல, மண்ணுக்கும் மனிதனுக்கும் என, அனைத்து உயிர்களுக்கும் எதிரியாக உள்ளது. இயற்கையே மாமருந்து என்பதை உணர்ந்து, விவசாயிகள் முடிந்த வரையில் ரசாயனத்துக்கு மாற்றாக பாரம்பரிய முறைப்படி இயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.. அப்படி இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் அழிவு எனும் நேர்கோட்டுப்பாதையில் அதிவேகத்தில் பயணிப்பதை தடுக்க இயலாது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.