முன் எச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் ‘மாண்டஸ்’ புயலால் பாதிப்பில்லை

நெல்லை: ‘மாண்டஸ்’ புயல் கரையை கடந்த நிலையில் நெல்லை, தென்காசி,   தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முன் எச்சரிக்கை   உத்தரவால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். வங்கக்கடலில்   உருவான மாண்டஸ் புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை அருகே உள்ள   மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இப்புயல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருந்தது. நெல்லை, தென்காசி,   தூத்துக்குடி மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் இருந்தது.

தூத்துக்குடி   மாவட்டத்தில் பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. புயல்   காரணமாக தூத்துக்குடி, சென்னை இடையே நேற்று முன்தினம் 2 விமான சேவைகள் ரத்து   செய்யப்பட்டது. தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம்   முழுவதும் வானம் மேகமூட்டமாக இருந்தது. பிற்பகலில் சில பகுதிகளில் சிறிது   நேரம் காற்று சற்று பலமாக வீசியது. பிற்பகல் மற்றும் இரவில் சிலபகுதிகளில்   விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

நெல்லை  மாவட்டத்தில் நேற்று  காலை 6 மணி வரையிலான நிலவரப்படி ராதாபுரம், பாளையில்  தலா 2.40 மிமீ மழை  பெய்தது. மூலைக்கரைப்பட்டியில் 2 மிமீ, களக்காடு  பகுதியில் 1.20 மிமீ மழை  பெய்தது. மாஞ்சோலை, நாலுமுக்கு தலா 1 மிமீ,  மணிமுத்தாறு பகுதியில் 0.60  மிமீ மழை  மட்டும் பெய்தது. தூத்துக்குடி, ெதன்காசி மாவட்டங்களிலும் சில  பகுதிகளில்  மிதமான மழை பெய்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது.  கருப்பாநதி பகுதியில் 6.50 மிமீ மழையும், குண்டாறு பகுதியில் 1 மிமீ  மழையும் பெய்தது.

மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் மழை இல்லை. பிரதான அணையான பாபநாசம்  அணைக்கு விநாடிக்கு  626.51 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 704.75 கனஅடி நீர்  வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 97.90 அடியாக  உள்ளது. மாண்டஸ் புயல் வடமாவட்டங்களில் சுழற்றி அடித்த போதிலும், கடலோர மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றிலும் சூழப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்திலும் எந்த பாதிப்பும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.