குன்னூர்: இங்கிலாந்து நாட்டில் சோமர்செட் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ குட்லேண்ட். உலக வங்கி முதன்மை விவசாய நிபுணராக உள்ள இவர், தனது நண்பர் கிறிஸ்டோபருடன் நேற்று குன்னூர் வெலிங்டன் வந்தார். முதல் உலக போர் நடந்த போது, அதில் ஆங்கிலேயர் படையில் 2வது லெப்டினென்ட் ஆக பணியாற்றிய இவரது தாத்தா ஸ்டேன்லி குட்லேண்ட் என்பவர் இங்குள்ள ஸ்டேஷன் ஹாஸ்பிடல் என்ற ராணுவ மருத்துவமனையில் டைபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அவர் கடிதங்களாக எழுதி வைக்கவே, அவரது கடிதங்கள் புத்தகமாக இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வெலிங்டன் பற்றி மிகவும் சிறப்பாக உள்ளதாக, தாத்தாவின் நினைவுகள் சுமந்த இடத்தை தானும் பார்வையிட வந்துள்ளார் பேரன். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து தாத்தா விரும்பி சென்ற இடங்கள், அவர் கோல்ப் விளையாடிய ஜிம்கானா மைதானம் உள்ளிட்டவற்றை நண்பருடன் சேர்ந்து பார்வையிட்டு ரசித்து புகைப்படம் எடுத்தார். அவரை தேசிய ஹாக்கி வீரர் சுரேஷ்குமார் ஆங்காங்கே அழைத்து சென்று விளக்கம் அளித்தார். மதராசபட்டினம் படத்தில், `சென்னையில் காதலனை விட்டு சென்ற இளவரசி, முதுமை காலத்தில் மீண்டும் இங்கிலாத்தில் இருந்து இந்தியா வந்தது போன்றே, தற்போது இங்கிலாந்தை சேர்ந்த பேரன், தாத்தாவின் நினைவுகளை தேடி குன்னூர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.