புதுடெல்லி: பொருளாதாரத் தடைக்கு உள்ளான நாடுகளில் உள்ள மக்களுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, அதுபோன்ற பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தடையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவும், அயர்லாந்தும் டிசம்பர் 9-ம் தேதியன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 14 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. ஆனால், இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது துணிச்சலான நடவடிக்கை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டுவதுடன், அதற்கான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பாராட்டியே ஆக வேண்டும்’’ என்றார்.