`ஓட்டு போட சொல்றேன் கேக்குறாங்களா? ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடறாங்களா?’-சரத்குமார்

“சரத்குமார் சொன்னதால் மட்டுமா ரம்மி விளையாடுகிறார்கள்? அப்படிபார்த்தால் ஓட்டு போடுங்கள் என்றும் தான் கேட்கிறேன். ஆனால், மக்கள் ஓட்டு போடுவதில்லையே” என்று தெரிவித்துள்ளார்.
போதைப் பொருட்களை ஒழித்திடவும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
image
உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக உள்ளது. ஆரோக்கியம் இருந்தால் தான் சிறந்த குடிமகனாக வாழ முடியும். மனித வளம் உள்ள நாடு இந்தியா. மனித வளத்தை நாம் பேணி காக்க வேண்டும். மெரினாவில் கூட சமீபத்தில் போதையில் தான் ஒருவர் கழுத்தை அறுத்து நகையை திருடி உள்ளனர். இளைஞர் படை சீரழிந்து போனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்.

டாஸ்மாக் இல்லாமல் 36 ஆயிரம் கோடி வருவாய் அரசுக்கு கிடைப்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் உள்ளது. ராஜாஜி ஆட்சி காலத்தில் எப்படி சென்னை மாகாணத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டதோ, அதனை பின்பற்றி தற்போதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிடலாம். தமிழ்நாட்டில் கஞ்சா மிகப்பெரியளவில் புழக்கத்தில் உள்ளது. அதற்கான தனிப்படையை உருவாக்கி தடுத்து மிகப்பெரிய தண்டனை கொடுத்தால் மட்டுமே அதை குறைக்க முடியும்.
image
மதுவிலக்கு என்ற திமுக வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லை. டாஸ்மாக்கால் வரும் வருமானத்தை வேறு வகையில் ஈடு கட்டுவதற்கான நடவடிக்கையை முதலில் பெருக்க வேண்டும். இன்றைக்கு கல்யாணம் முதல் வேலை வரை அனைத்திலும் தற்போது குடி தான் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி பற்றி பேசுகையில், “ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் மட்டும் இல்லை. ஷாருக்கான், தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். ரம்மி விளையாடுவதென்பது அறிவுப்பூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாட அறிவு வேண்டும். ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள். இதில் சரத்குமார் சொன்னால் மட்டும் எப்படி ரம்மி விளையாடுவார்கள்? ஓட்டு போடுங்கள் என்றும் தான் நான் கேட்கிறேன். ஆனால் ஓட்டு போட மாட்டேங்கிறார்களே… ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்றும் தான் கேட்கிறேன். அதையும்தான் செய்வதில்லையே மக்கள். பின் ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடுவாங்கனு எப்படி எடுத்துகொள்வது?
image
தமிழ்நாடு அரசு அவசர சட்டம் இயற்றிய பிறகு நான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடித்த விளம்பம் தற்போது ஒளிபரப்பப்படுகிறது” என்றார்.

https://t.co/0McD7n2fen
— R Sarath Kumar (@realsarathkumar) December 13, 2022

தொடர்ந்து தமிழக அரசு குறித்தும் உதயநிதி அமைச்சராவது குறித்தும் பேசுகையில், “அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளேன். மாண்டஸ் புயலில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது. சென்னை மேயர் முதல்வர் கான்வாய் வாகனத்தில் சென்றதை அனைவரும் ஏளனப்படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில் அதில் எந்த தவறும் இல்லை. சூழ்நிலை என்னவென்று பார்க்காமல் நாம் பலர் வேடிக்கையாய் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்றார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது’ கூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்வோம் என்றும் அவர் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.