காந்திநகர்: குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல்(62) நேற்று பதவியேற்றார். அவருடன் 8 கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது.
இதையடுத்து, தலைநகர் காந்திநகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது.
குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேலுக்கு, ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து, 16 அமைச்சர்களும் பதவிஏற்றுக் கொண்டனர். இவர்களில் கனுபாய் தேசாய், ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பகவந்த்சிங் ராஜ்புத், குன்வாரிஜி பவாலியா, முலுபாய் பேரா, குபேர், பானுபென் பாபாரியா ஆகியோ்ர் கேபினட் அமைச்சர்கள் ஆவர்.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு மேடையில் எழுந்து நின்ற பிரதமர், சிரம் தாழ்த்தி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சகா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
பல்வேறு மடங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதிய அமைச்சரவையில் பானுபென் பாபாரியா என்ற பெண் இடம்பெற்றுள்ளார். ராஜ்கோட் புறநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 3 முறை தொடர்ச்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வராகப் பதவியேற்றுள்ள பூபேந்திர ரஜினிகாந்த் படேல், சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர். கட்டுமானத் துறையில் ஈடுபட்ட அவர், அகமதாபாத் மாநகராட்சியில் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2017-ல் முதல்முறையாக காட்லோடியோ தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 செப்டம்பர் 11-ம் தேதி, அப்போதைய முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். தொடர்ந்து 2021 செப்டம்பர் 13-ம் தேதி குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். தற்போது 2-வது முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நள்ளிரவு அகமதாபாத் விமான நிலையம் சென்று, அங்கிருந்து காரில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். நள்ளிரவிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு, பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
குஜராத் தேர்தலில் சுயேச்சைகளாக வெற்றி பெற்றுள்ள மாவ்ஜி தேசாய், தர்மேந்திர வகேலா, தவால் ஜாலா ஆகியோர் பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மியைச் சேர்ந்த 5 பேர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.