குறுகிய தூரம் பயணம் மேற்கொள்வோர் சாதாரண டிக்கெட் எடுத்தாலும் விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்தது. ஏற்கனவே ஒரு சில விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் டிரிசர்வ்டு எனும் வசதி செயல்பட்டு வருகிறது.
சாதாரண கட்டணத்துடன் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் கொடுத்து சில ரயில்களில் டிரிசர்வ்டு முறையில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் டிரிசர்வ்டு அல்லாத வழக்கமான முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட்டின்றி பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
தமிழகத்தில் சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி ரயிலில் எஸ்-11, 12 பெட்டிகளில் திருநெல்வேலியில் இருந்து கொல்லம் வரை இரு மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம். அதேபோன்று எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயிலில் எஸ்-12, 13 பெட்டிகளில் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை இரு மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.
அதேபோன்று மங்களூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் மங்களூர் விரைவு ரயில் திருச்சி முதல் மங்களூர் வரை எஸ்-7, 8, 9, 10 ஆகிய பெட்டிகளிலும், மங்களூரில் இருந்து எழும்பூர் இடையே இயக்கும்போது எஸ்-10 பெட்டியில் மட்டும் பயணம் மேற்கொள்ளலாம். தூத்துக்குடி முதல் கர்நாடக மாநிலம் மைசூர் வரை இயக்கப்படும் ரயிலில் தூத்துக்குடி முதல் மதுரை வரை எஸ். 4,10, 11, 13 பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
அதேபோன்று கன்னியாகுமரி முதல் கர்நாடக மாநிலம் பெங்களூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரி முதல் எர்ணாகுளம் வரை எஸ்-6, 7 ஆகிய பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளலாம். சென்னை சென்ட்ரல் முதல் நாகர்கோயில் இடையே இயக்கப்படும் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-11,12 ஆகிய பெட்டிகளில் திருநெல்வேலி முதல் நாகர்கோயில் வரை சாதாரண டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.