தந்தையின் வங்கி கணக்கில்80 ஆயிரம் எடுத்து செலவிட்டதால் சிறுநீரகத்தை விற்று பணத்தை திருப்பி தர முயன்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சி: ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி16 லட்சத்தை இழந்த பரிதாபம்

திருமலை: தந்தையின் வங்கி கணக்கில் இருந்து செலவு செய்த ரூ.80 ஆயிரத்தை திருப்பி தர சிறுநீரகத்தை விற்க கல்லூரி மாணவி முயன்றார். அவரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தை சேர்ந்தவர் யாமினி. கல்லூரி மாணவி. இவரிடம் தந்தையின் ஏ.டி.எம்.கார்டு இருக்குமாம். அதை பயன்படுத்தி80 ஆயிரத்தை தனது சொந்த செலவிற்கு செலவு செய்துள்ளார். ‘இது தெரிந்தால் அப்பா திட்டுவாரே, இதை எப்படி திருப்பி செலுத்துவது’ என யாமினி யோசித்தார். இதற்காக ஆன்லைனில் தேடியபோது, ‘சிறுநீரகம் விற்றால் பணம் கிடைக்கும்’ என்ற லிங்கை பார்த்து தனது சிறுநீரகத்தை விற்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆன்லைன் மோசடிக்காரர்கள், யாமினியிடம் தொடர்பு கொண்டு, அறுவை சிகிச்சைக்கு முன்பு3 கோடியும், பின்னர்3 கோடியும் தருவதாக கூறியுள்ளனர். மேலும் யாமினி பெயரில் சென்னையில் உள்ள ஒரு சிட்டி வங்கி கிளையில் போலியாக வங்கி கணக்கை தொடங்கி, அதில்3 கோடி செலுத்தி இருப்பதாகவும் ஆனால் இந்த பணம் எடுக்க வேண்டும் என்றால் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ், பல்வேறு வரி செலுத்த வேண்டும்’ என கூறி பணம் கேட்டுள்ளனர். இதை நம்பிய யாமினி, தனது தந்தை வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தில் வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மோசடியாளர்கள் கூறிய வங்கிகளில்16 லட்சம் வரை செலுத்தியுள்ளார். இந்நிலையில் வங்கியில் பணம் எடுக்க யாமினியின் தந்தை சென்றுள்ளார். அப்போது,4 லட்சம் மட்டுமே இருப்பதும் மற்றவை எடுக்கப்பட்டு விட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர், யாமினிக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி கூறினார். இதனால் பயந்து போன யாமினி, தோழி வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் பேசிய யாமினி, ‘நான் சிறுநீரகம் விற்கவில்லை. எனது பணத்தை திரும்பி கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ஒரு முகவரியை கூறி டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளனர். உடனே யாமினியும் சென்றார். யாரும் இல்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஊருக்கு திரும்பினார். இதற்கிடையில் யாமினி உடனடியாக வீடு திரும்பாததால் இதுகுறித்து கன்சிகசெர்லா காவல் நிலையத்தில், ‘எனது மகளை காணவில்லை’ என தந்தை புகார் அளித்தார். இதையடுத்து யாமினியின் செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான் நடந்த விவரங்களை யாமினி கூறினார். போலீசாரும், ஆன்லைன் மோசடி குறித்து யாமினிக்கு புரிய வைத்தனர். இதுகுறித்து குண்டூர் எஸ்.பி. ஆரிப் ஹபீஸிடம் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.