லோகேஷ் கனகராஜ் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ‘விக்ரம்’ படத்திற்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 5ம் தேதியன்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோஸ் வளாகத்தினுள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, அர்ஜுன், அனிரூத், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ‘தளபதி 67’ படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ வாயிலாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விக்ரம் படத்தை போன்றே இந்த படத்திற்கும் விஜய்யை வைத்து ஒரு வீடியோ வெளியாகும் என்று செய்திகள் வெளியானது.
‘தளபதி 67’ லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் ஒரு பகுதியா அல்லது இது வேறு மாதிரியான கதையாக இருக்குமா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் இந்த படம் கண்டிப்பாக போதைப்பொருள், கேங்ஸ்டர் மற்றும் போலீஸ் இதை சுற்றித்தான் அமையும் என்று கூறுகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ‘தளபதி 67’ படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இருந்து மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரம் படத்திலிருந்து கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரும் கைதி படத்திலிருந்து நடிகர் கார்த்தியும் ‘தளபதி 67’ படத்தில் இடம்பெறுவார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் இது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைவதோடு, ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மறுபுறம் எல்சியூ-ல் உள்ள கதாபாத்திரங்கள் ‘தளபதி 67’ படத்தில் இல்லாவிட்டாலும் இதில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு வெளியானதற்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.