துணை முதலமைச்சராகும் உதயநிதி? காத்திருக்கும் ட்விஸ்டுகள்!

Udhayanidhi Stalin News: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தான் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. முதல்முறையாக கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கு 17 மாதங்களில் அமைச்சர் பதவி தேடி வந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதோடு திமுக அமைச்சரவை மாற்றமும் நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்கலாம், அதேபோல யாரை வேண்டுமானாலும் அமைச்சரவையில் இருந்து நீக்கலாம் என்ற பவர் முதலமைச்சரிடம் உள்ளது. 2011-ல் மாதத்துக்கு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள் என்பது பலரும் அறிந்த ஒன்று தான்.

சூடுபிடிக்கும் “வாரிசு அரசியல்”
ஆனால் இப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது சர்ச்சையை கிளப்ப மற்றொரு காரணமும் உள்ளது. வாரிசு அரசியல் என்றும் குடும்ப அரசியல் என்றும் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். கிட்டதட்ட 45 ஆண்டுகள் போராடி தான் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். அவரை அதிகம் யாரும் விமர்சிக்க வில்லை. ஆனால் உதயநிதியின் அதிகப்படியான வளர்ச்சி “வாரிசு அரசியல்” பேச்சை கொஞ்சம் அதிகமாகவே கொளுத்திப்போட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை விட உதயநிதி ஸ்டாலின் மீதான விமர்சனம் இந்த முறை அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. 

நான் யாரையும் மிரட்டி படங்களை வாங்கவில்லை-உதயநிதி
ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் சினிமாத்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் இவர் மீது விமர்சனம் உண்டு. ஆளும் கட்சி திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாத்துறையில் ரெட் ஜெயண்ட் ராஜ்ஜியம் தான் என சொல்லும் அளவுக்கு பெரிய படங்கள் முதல் சிறுபட்ஜெட் படங்கள் வரை அவர்கள் தான் ரிலீஸ் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பலரை மிரட்டி படத்தை வாங்கி வெளியிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை யாரும் நேரடியாக புகாரும் அளிக்கவில்லை. அதேநேரத்தில் “கட்டா குஸ்தி” படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், நான் யாரையும் மிரட்டி படங்களை வாங்கவில்லை என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

2011 காலகட்டத்தில் படங்களில் நாயகனாக நடிக்கத்தொடங்கிய உதயநிதி 10 ஆண்டுகள் சினிமாத்துறையில் இருந்தும், ஒரு பிளாக் பஸ்டர் படம் கூட கொடுத்ததில்லை. நடிகராக அவர் ஜொலிக்கவில்லை என்றாலும், படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது என அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

உதயநிதியின் அரசியல் பயணம்:
சினிமாத்துறையை அடுத்து 2018-ம் ஆண்டு அரசியலில் கால் பதித்தார் உதயநிதி. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்காக திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீயாய் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை அவர் கலாய்த்தது மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை தனதாக்கியது. அடுத்ததாக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் பட்டியல் இறுதியாகும் வரை உதயநிதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது சந்தேகமாகவே இருந்தது. அவர் சேப்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் 10 ஆண்டுகள் கழித்து திமுக வெற்றி மகுடம் சூடியது. ஆம், உதயநிதி ஸ்டாலினும் முதல்முறையாக எம்.எல்.ஏவக வெற்றி பெற்று தலைமைச்செயலகத்தில் கால் எடுத்து வைத்தார். 

உதயநிதிக்கு அமைச்சர் பதவி உறுதியானது:
அப்போதிலிருந்தே உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது என கேள்வி எழுந்தது. இந்த சூழலில் தான் உதயநிதி அமைச்சராவது உறுதியானது. உடனே பலரும் எந்த அமைச்சரின் பதவி பறிக்கப்படுமோ என காத்திருந்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பதில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள மெய்யநாதனிடம் இருந்து, இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை எடுக்கப்பட்டு அது உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளது. 

துணை முதல்வராக பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- அமைச்சர் பொன்முடி
அதோடு இவர் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளதாக பேசப்படுகிறது. பேட்டி ஒன்றில் பேசிய பொன்முடி, உதயநிதி இப்போது அமைச்சராவதே தாமதம் தான் எனவும், துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பதை காண ஆவலுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

உதயநிதிக்கு செந்தில் பாலாஜியின் வாழ்த்து மடல்:
செந்தில் பாலாஜி தனது ட்விட்டரில், சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும் என உதயநிதிக்கு வாழ்த்து மடல் வாசித்துள்ளார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, உதயநிதியிடம் இளைஞர் மேம்பாட்டு துறை வழங்கப்பட்டதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சியை தமிழகத்தில் தடுப்பதற்கு என ஒருசில உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர். அமைச்சராக பொருப்பேற்கும் உதயநிதி திமுகவின் வளர்ச்சிக்கு உதவுவாரா? அல்லது சர்ச்சைகளில் சிக்குவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.