நடத்தை சந்தேகத்தால் விபரீத முடிவு மனைவி, 4 குழந்தைகள் சரமாரி வெட்டி படுகொலை: விவசாயி தற்கொலை: செங்கம் அருகே நள்ளிரவில் பயங்கரம்

செங்கம்: செங்கம் அருகே நள்ளிரவில் மனைவி மற்றும் 4 குழந்தைகளை வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்தார். நடத்தை சந்தேகத்தால் நடந்த இந்த விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த ஓரவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (40), விவசாயி. இவரது மனைவி வள்ளி (37). தம்பதியின் மகள்கள் சவுந்தர்யா (19), திரிஷா (15), மோனிஷா (14), பூமிகா (9), தனு (4), மகன் சிவசக்தி (6). மூத்த மகள் சவுந்தர்யாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் வீட்டில் வசிக்கிறார்.

இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பழனி விவசாயம் செய்து வந்துள்ளார். பழனிக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியின் நடத்தை குறித்து சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபடுவாராம். மேலும் அவருக்கு கடன் பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாம். இதனை அதே பகுதியில் வசிக்கும் வள்ளியின் தாய் ஜானகி, சமாதானப்படுத்தி வந்துள்ளார். நேற்றிரவு மதுபோதையில் வீடு திரும்பிய பழனி, குடும்பத்துடன் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மகள் மற்றும் பேர குழந்தைகளை பார்க்க வழக்கம்போல் வந்தார் ஜானகி. கதவு திறந்து கிடந்தது. சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது முதல் அறையில் பழனி தூக்கில் சடலமாக கிடந்தார். உடலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் மற்றவர்களை தேடியபோது, ஒரு அறையில் வள்ளி, திரிஷா, மோனிஷா, தனு, சிவசக்தி ஆகிய 5 பேரும் கழுத்து மற்றும் தலையில் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். பூமிகா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்தும் ஜானகி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

தகவலறிந்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பூமிகாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் சடலமாக கிடந்த பழனி, வள்ளி மற்றும் குழந்தைகள் என 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், மனைவி மீது பழனிக்கு சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்றிரவும் மதுபோதையில் தகராறு செய்துள்ளார்.

பின்னர் சாப்பிட்டு முடிந்ததும் தூங்க சென்றது தெரியவந்தது. நள்ளிரவு தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், கடும் ஆத்திரமடைந்ததுடன் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளார். துடிக்கதுடிக்க அவர்களை கொலை செய்த நிலையில் அங்குள்ள அறைக்குள் சென்று அவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நடத்தை சந்தேகத்தால் மனைவி மற்றும் குழந்தைகள் என 5 பேரை வெட்டி கொன்று கணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.