நாகை அருகே மாண்டஸ் புயலின்போது ஊருக்குள் புகுந்த கடல் நீர் வடியவில்லை: வயல்களில் 3 அடி வரை கடல் நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசம்..!!

நாகை: நாகை அருகே மாண்டஸ் புயல் தாக்கிய போது ஊருக்குள் புகுந்த கடல் நீர் வடியாததால் சுமார் 200 ஏக்கர் வேளாண் நிலங்களில் சுமார் 3 அடி அளவுக்கு கடல் நீர் தேங்கி நிற்கிறது. வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கடலோர கிராமமான மண்டுவாங்கரையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். மாண்டஸ் புயலால் பல அடி  உயரத்திற்கு ஆர்ப்பரித்த கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

சம்பா சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு கடல் நீர் தேங்கி நிற்கிறது. நான்கு நாட்கள் ஆகியும் கடல் நீர் வடியாததால் உழவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே கஜா புயலின் போது உட்புகுந்த கடல் நீரால் உப்புத்தன்மை ஏறிய வேளாண் நிலத்தை, மழை நீரை தேக்கி வைத்து மீட்ட உழவர்கள், மீண்டும் கடல் நீர் புகுந்துள்ளதால் வேதனை அடைத்துள்ளனர். கடுவை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக ஆற்றில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள மணல் திட்டுகளே கடல் நீர் வடியாததற்கு காரணம் என உழவர்கள் தெரிவிக்கின்றனர். கடல் நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.