மக்கள் இயக்கத்தினரை சந்திக்கும் விஜய்: அடுத்து என்ன?

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பானது சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பணையூரில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது, மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து நடிகர் விஜய் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவார் என தெரிகிறது. இந்த சந்திப்பின்போது, அரசியல் தொடர்பாகவும் பேசப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திப்பு முடிந்தவுடன் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் பிரியாணியுடன் கூடிய அசைவ விருந்து கொடுக்கவுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் சந்தித்த நடிகர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஏற்கனவே வாரிசு பட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் பிரச்சினை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில்,

நாளை மகுடம் சூடவுள்ள நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து ஆலோனை நடத்துவது கவனம் ஈர்த்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டவர் நடிகர் விஜய். 2009ஆம் ஆண்டே அவரது ரசிகர் மன்றங்கள் “மக்கள் இயக்கம்” என்ற அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டது. இதற்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தது. மக்கள் இயக்கத்தின் மூலம், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதுடன், சமூகம் சார்ந்து பல்வேறு கருத்துகளையும் துணிச்சலாக கூறும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது அடிபடுவதுண்டு. அதற்கு ஏற்றவகையில், அவரது மக்கள் இயக்கத்தினர் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கணிசமான இடங்களை கைப்பற்றியிருந்தனர்.

ஆனால், விஜய்யின் அரசியல் வருகையை உதயநிதி ஸ்டாலின் ரசிக்கவில்லை என தெரிகிறது. விஜய் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அது தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உதயநிதி நினைப்பதாக கூறுகிறார்கள். அமைச்சராகி ஸ்டாலின் காலத்துக்கு பின்னர் தமிழக அரசியலில் முக்கியமான சக்தியாக உதயநிதி உருவெடுக்கும் போது விஜய் அரசியலில் வந்து நிற்பார். அப்போது அவருக்கு எதிராக விஜய் இருப்பார் என உதயநிதிக்கு சொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். எனவே, விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நினைப்பதால், இருவருக்கும் இடையே டேர்ம்ஸ் சரியில்லை என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.