மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துரிதப்படுத்துங்கள்: மத்திய அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு, சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் காரணமின்றி மெதுவாக நடைபெற்று வருகின்றன என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019, ஜனவரி 17ம் தேதி நாட்டினார். மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள்தான் நடந்துள்ளன.

இது குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்விக்கு கடந்த 9ம் தேதி நீங்கள் அவைக்கு பதில் அளித்திருந்தீர்கள். அதில், மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு கடன் வழங்கும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை, திட்டத்திற்கான மதிப்பீட்டை ரூ. 1,264 கோடியில் இருந்து, ரூ. 1,977.80 கோடியாக தற்போது உயர்த்தி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மதுரை எய்ம்ஸ் திட்டம் வரும் 2026 அக்டோபருக்குள் முடிக்கப்பட்டு விடும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதல் பேட்ஜ் மாணவர்கள், தங்களின் மருத்துவக் கல்வியை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்கள். இந்த தாமதம் காரணமாக அவர்கள் தங்கள் கல்லூரி வாசலை மிதிக்காமலேயே படிப்பை முடிக்க இருக்கிறார்கள். பெருமைமிகு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு இப்படி நேர இருப்பது சரியானது அல்ல. தமிழ்நாட்டின் மருத்துவ மையமாக மதுரை எய்ம்ஸ் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த மருத்துவமனையை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என கார்த்தி சிதம்பரம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.