புதுடெல்லி: பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் 19-ல் இதன் தொடக்க விழா, பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் இசைஞானி இளையராஜா தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார்.
இதையடுத்து அவருக்கு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளேயும் இசையுடன் பக்திப் பாடல்கள் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பை காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை சார்பில் அதன் முதன்மை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா, அனுப்பியிருந்தார்.
இதை ஏற்ற இளையராஜா நாளை மறுதினம் வியாழக்கிழமை (டிச. 15) காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் தமிழனாக இசையமைத்து பாட உள்ளார். மாலை 6 மணிக்கு தொடங்கும் கச்சேரியில் அவரது இசைக்கலைஞர்கள் சுமார் 80 பேரும் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 16 பாடல்களை இளையராஜா இசையுடன் பாடுகிறார்.
‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என கூறுவார்கள். இச்சூழலில், அங்குள்ள சிவன் முன்பு மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இளையராஜா முதன் முறையாகப் பாட உள்ளார். திருவாசகத்திலிருந்து 4 பாடல்கள் இடம்பெற உள்ளன.
பிரதமர் மோடியின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட பின் காசி விஸ்வநாதர் கோயில் முற்றிலும் புதிய தோற்றத்தில் உள்ளது. இதனுள் கோயிலின் கருவறை முன்பான பெரிய வராண்டாவில் அமர்ந்து ஆயிரம் பேர் பார்வையிடலாம். இளையராஜாவின் பக்தி இசையை கேட்டு மகிழ சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சிவ பக்தர்களும், அவரது ரசிகர்களும் வர உள்ளனர். இளையராஜாவின் கச்சேரி காரணமாக, நாடு முழுவதிலும் இருந்தும் வாரணாசி செல்லும் விமானங்களில் பயணச்சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, “உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்கு செல்ல விரும்புவது உண்டு. இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் தமிழனின் குரலாக இளையராஜா இசையுடன் பாடுவது பெருமைக்குரியது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது” என்றார்.
தற்போது வாரணாசியில் கடும் குளிர் நிலவுகிறது. என்றாலும் கோயில் கச்சேரிக்கு வருவோர் இதை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இவர்களது பாதுகாப்புக்காக கோயில் வளாகத்தின் மார்பிள் தரைகளில் குளிர் தாங்கும் வகையில் கம்பள விரிப்புகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிக்கப்பட உள்ளன.
கச்சேரிக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. எனவே முதலில் வருபவர்களுக்கு உள்ளே இருக்கும் இடத்தை பொறுத்து முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. மேடைகள் இன்றி கோயிலின் தோற்றம் மாறாதபடி தரையில் அமர்ந்து இளையராஜா பாட உள்ளார். கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து லேசர் ஒளியும் நிகழ்ச்சியை மெருகூட்ட உள்ளது.
காசி விஸ்வாநாதர் கோயிலில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு குறித்து இசைஞானி இளைய ராஜா, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திற்காக பேசிய வீடியோ, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை இச்செய்தியுடன் கொடுக்கப் பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து வாசகர்கள் கேட்டு மகிழலாம்.