விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசி உள்ளார். இன்று நடைபெற்ற சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் மத்தியில் பேசிய நடிகர் விஜய் “வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வாரிசு திரைப்படம் வெளியானதற்கு முன்பும் பின்பும் அரசியல் ரீதியிலான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், குறிப்பாக வருங்கால முதல்வரே..!! நாளைய முதல்வரே..!! போன்ற வாசகங்கள் நமக்கு வேண்டாம். அதேபோன்று வாரிசு திரைப்படம் வெளியாகும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேனர்கள் வைப்பது போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்யும் நாம் இதுபோன்ற செயல்கள் மூலம் மக்களிடம் அவப்பெயர் வாங்க கூடாது. அதேபோன்று சமூக வலைதளங்களில் வைக்கக்கூடிய கருத்துக்களை கண்ணியமாகவும் நாகரிகமாகவும் முன் வைக்க வேண்டும். வாரிசு படத்துடன் துணிவு படமும் வெளியாவதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும். அதேபோன்று கட்டவுகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” என நடிகர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார்.