புதுடில்லி : வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ. பெரியசாமி, 2008ல் தி.மு.க., ஆட்சியின்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது சென்னை முகப்பேர் ஏரி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிலங்கள் மனைகளாக விற்கப்பட்டன. இங்கு, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரியான கணேசனுக்கு மனை ஒதுக்கப்பட்டது.
ஆனால், அவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் தன் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததை மறைத்து, மனை ஒதுக்க மனு கொடுத்திருந்தார். முதல்வருடன் நெருக்கமாக இருந்ததால் அவருக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. இந்த மனையை, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விற்றார்.
சட்டவிரோதமாக வீட்டு மனை ஒதுக்கப்பட்டது தொடர்பாக, ஊழல் கண்காணிப்பு இயக்குனரகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஐ.பெரியசாமி மற்றும் கணேசன் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.ஆர். ஷா, எஸ். ரவீந்திர பட் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வும், இதை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement