‘அங்க எதுக்கு அரை வயிறு சாப்பிடணும்’-வெளிநாட்டு வேலையை உதறி தள்ளி சொந்த ஊரில் ஜெயித்த நபர்

வெளிநாட்டு வேலையை கைவிட்ட நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து வெற்றி பெற்ற நபர் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியான மன்னார்குடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றளவும் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இருந்தபோதும் தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலான ஆண்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது இப்பகுதியில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அக்காலத்தில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் போன்ற நாடுகளுக்கு இந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று கடினமாக உழைத்து பொருள் சேர்த்து வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
ஆனால் தற்போதும் இத்தகைய வசதியான வாழ்க்கை தமிழகத்தில் இருந்து வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அரசின் விதிமுறைகளை பின்பற்றி உரிய ஆவணங்களுடன் தகுதியான நபர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றாலும், வெளிநாடுகளில் பலருக்கும் அவர்கள் நினைத்த வேலை கிடைப்பதில்லை. அதனால் தங்கள் வறுமை நிலையை உணர்ந்து கிடைத்த வேலையை செய்து அடிமைகள் போல் வேலை செய்து வருகின்றனர்.
image
மன்னார்குடி பகுதியில் பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, வடுவூர், கருவாக்குறிச்சி என பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று வாழ்க்கையில் பொருளீட்டி வெற்றி பெற்றவர்களை போல் வெளிநாடுகளில் வேலைக்கு சென்று உயிரிழந்தவர்களும், வேறு வழியின்றி மீண்டும் சொந்த ஊருக்கு வந்து தங்களின் கடின உழைப்பால் சிறு தொழில் தொடங்கி பெரும் முதலாளியாக வளர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
மன்னார்குடியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை இருப்பதாக கூறியதை நம்பி, அங்கு வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு பூ பறிக்கும் வேலை தரப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை பூக்களை பறித்து சேகரித்து அனுப்ப வேண்டும். மூன்று வேளையும் அரைவயிறு உணவு மட்டுமே வழங்கப்பட்டது. மாத சம்பளமும் குறித்த நேரத்தில் வழங்கவில்லை. வெளிநாட்டை நம்பி கடினமாக உழைத்தும் உரிய பலன் கிடைக்காமல் மீண்டும் மன்னார்குடிக்கு திரும்பி வந்த ராஜசேகர், கட்டுமான தொழிலை கற்றுக்கொண்டு கடந்த 7 வருடங்களாக மன்னார்குடி பகுதியில் கட்டுமான தொழிலை சிறப்பாக செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.