மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கிறிஸ்துவ சீர்திருத்த இயக்கத் தலைவர் தேவசகாயம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “மதுரை மாவட்டத்தை அடுத்த தல்லாகுளத்தில் 31.10 ஏக்கர் நிலத்தை கடந்த 1912 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரியின் “அமெரிக்கன் போர்ட் ஆஃப் கமிஷனர் ஃபார் ஃபாரின் மிஷன்ஸ்” என்று அழைக்கப்படும் ஏ.பி.சி.எஃப்.எம் என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கு ஈடான சந்தை மதிப்பு தொகையை செலுத்த வேண்டும், அந்த நிலத்தை தொழில் தொண்டு நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என நிபந்தனையுடன் வழங்கப்பட்டது. நிபந்தனைகளை மீறினால் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏ.பி.சி.எஃப்.எம் அமைப்பின் பெயரானது யுனைடெட் சர்ச் போர்டு என மாற்றம் செய்யப்பட்டது.
அரசால் வழங்கப்பட்ட இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாயை அனாதை மற்றும் ஆதரவற்றோருக்கான தொழில் பயிற்சி நிலையத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் யுனைடெட் சர்ச் போர்டின் சில சொத்துக்கள் சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேசன் எனப்படும் சி.எஸ்.ஐ.டி.ஏவுக்கு சட்டவிரோதமாக கடந்த 1973ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி சி.எஸ்.ஐ.டி.ஏ அமைப்பு அரசின் நிபந்தனையை மீறியதால் அந்த சொத்துக்கள் அனைத்தையும் அரசு மீண்டும் கையாக படுத்த தவறிவிட்டது. இதனால் சி.எஸ்.ஐ.டி.ஏ இயக்குனர்கள் மற்றும் சி.எஸ்.ஐ, மதுரை மற்றும் ராமநாதபுரம் மண்டல நிர்வாகிகள் சிலர் கூட்டு சேர்ந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
தமிழக அரசின் 31.10 ஏக்கர் நிலத்தை மீட்க கோரி வருவாய் செயலாளர், நில நிர்வாக ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு “மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. அரசு தரப்பில் அவர் அளித்த மனுவை பரிசளித்து விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு தகுந்த உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.