வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா- சீனா எல்லையில் ஏற்படும் பதற்றத்தை தணித்துவிட்டு, அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2020 ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என தெரிகிறது. இதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்க இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 9 ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில், இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள தவாங் செக்டார் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் எல்லை தாண்டி வந்த போது, இந்திய வீரர்கள் தடுத்தனர்.
அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள், சீன வீரர்களை உறுதியுடன் எதிர்த்தனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதல் தொடர்பாக லோக்சபாவில் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்: கடந்த 9 ம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யங்ஸ்டே பகுதியை சீன வீரர்கள் ஆக்கிரமித்து அங்கு மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். இதனை இந்திய வீரர்கள் உறுதியான முறையில் சமாளித்தனர். நமது வீரர்கள், தைரியமாக சீன வீரர்களை எதிர்கொண்டு, அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் முகாம்களுக்கு திருப்பி அனுப்பினர் எனக் கூறினார்.
இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் கூறியிருப்பதாவது: அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா சீனா எல்லையில் ஏற்படும் பதற்றத்தை தணித்துவிட்டு, அமைதி நிலவ வேண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement