இன்று அரங்கேறியது அமைச்சரவை மாற்றமா இல்லை முடிசூட்டும் விழாவா?… சசிகலா கேள்வி

திமுக எம்.எல்.ஏவும், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவர் அமைச்சராக பதவியேற்றதற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துவருகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டது தொடர்பாக சசிகலா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை நம்பவைத்து, அதன்மூலம் ஆட்சிக்கட்டியில் அமர்ந்து தற்போது 19 மாதத்தில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் முடிசூட்டும் விழாவையும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இதுதான் இந்த திராவிட மாடலில் சாதனையாக பார்க்க முடிகிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கும்போதே ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் அனைவரும் ஒரு அமைச்சருக்கு உள்ள அந்தஸ்தை கொடுத்து, புதிய பேருந்து போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த நாடகத்தையும் நாம் பார்த்தோம். அதேபோல் அமைச்சர்களும் சொல்லி வைத்தார் போல் புகழ்ந்து பேசி துதிபாடும் நாடகங்களும் நம்மால் பார்க்கமுடிந்தது. இதைத்தால் இவர்கள் திராவிட மாடல் ஆட்சி என்று அனுதினமும் மார்த்தட்டி கொள்கிறார்கள்.

இப்போது புயல், மழை, வெள்ளம், விவசாயிகள் படும்பாடு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாக இருக்கிறது, வீடு வாசலை இழந்து தங்குவதற்கு இடம் இன்றி தவிக்கும் மக்கள் ஒருபக்கம், குடியிருக்கும் தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலைமை வீடுகளை இழந்துள்ளவர்கள் ஒருபுறம் என்று தமிழகத்தின் இன்றைய நிலைமை இப்படி இருக்க, மக்கள் பணிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவசரகால பணியாக முடிசூட்டும் விழா நடக்கிறது. தமிழக மக்களிடம் இவர்கள் போடும் பகல் வேஷம் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தங்கள் ஆட்சி முடிவதற்குள் வரிசையில் உள்ள அடுத்த வாரிசின் முடிசூட்டு விழாவும் நடத்தேறும்.

இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் நினைத்து பார்க்கிறேன் ஜெயலலிதா தன்னுடைய வாரிசாக தமிழக மக்களைத்தான் பார்த்தார்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்களையும் தொண்டர்களையும் தனது உயிர்மூச்சாக பார்த்தார்கள். அதேபோன்று எங்கள் இருபெரும் தலைவர்களின் வழியில், கழகத் தொண்டர்களையும், தமிழக மக்களையும்தான் நானும் பார்க்கிறேன்.

ஜனநாயகத்தில் மன்னராட்சியை கொண்டு வந்த பெருமை திமுகவையே சேரும். திமுகவிற்காக பாடுபட்ட எத்தனையோ அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள், திறமையானவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் வாய் திறக்கமுடியாமல் மௌனமாக இருக்க வேண்டிய நிலைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவே, திமுகவிற்காக உழைத்தவர்கள் கடைக்கோடியில் நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் இதைத்தான் இவர்களது திராவிட மாடலாக பார்க்கமுடிகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.